யார் மன நோயாளி ?

Sunday, May 8, 2011 10:36 PM Posted by பொய்யன் டிஜே

வாசகர் உணர்வு பகுதியில் இருந்து....

சென்ற வார மக்கள் உரிமையில் தேர்தலில் உழைத்த தொண்டர்களுக்கு நன்றி செலுத்தி ஜவாஹிருல்லா சாயப் எழுதியிருந்த கடிதம் படித்தேன். அதிலே ஜவாஹிருல்லா அவர்கள் ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களைப் பற்றி எழுதி வரும் போது பிஜெ சாயப் அவர்களைப் பற்றி மனநோயாளி என்றும் அவர் எப்போதுமே தமுமுகவுக்கு எதிராகத் தான் முடிவெடுப்பார் என்றும் எழுதியிருந்தார்.

நடந்து முடிந்த தேர்தலிலே நீங்கள் எங்கள் தொகுதியான ராமநாதபுரத்தில் போட்டியிட்டீர்கள். தமுமுகவை ஆதரித்தும் எதிர்த்தும் நம் சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் களமிறங்கினார்கள். வழக்கம் போல பிஜெ சாயப் இந்த தடவையும் தமுமுகவுக்கு எதிராகத் தான் பிரச்சாரம் செய்தார். அவர் தமுமுகவுக்கு எதிரான நிலைபாடு எடுத்ததுமே அவர் மீது நாங்கள் கோபப்பட்டோம்.

பிஜெ சாயப் அவர்கள் சமுதாய நலனில் அக்கறை கொண்ட தமுமுகவிற்கு ஆதரவு தெரிவிக்காமல் தன் சொந்த பகையை வைத்துக் கொண்டு எதிர்க்கிறாரே! ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வது போல பிஜெ சாயப்பின் பிரச்சாரம் இருக்கிறதே இது நம் சமுதாய ஒற்றுமையை பாதிக்குமே என்று நினைத்தேன். ஆனால் கடைசியில் தமுமுகவினரின் நடவடிக்கைகளை கண்கூடாகப் பார்த்த போது தான், அவர் எடுத்த நிலைபாடு மிகச் சரி என்ற முடிவுக்கு வந்தேன். பிஜெ சாயப்பிற்கும் எங்களுக்கும் மார்க்க விசயத்தில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால் அரசியல் மற்றும் சமுதாய நலன் சார்ந்த நிலைபாட்டில் அவரின் ஜமாத் மட்டும் தான் சமுதாய நலத்தினை மட்டும் கருத்தில் கொண்டு ஒரு கட்சியை ஆதரிக்கிறது என்பதை நாங்கள் இப்போது உள்ளங்கை நெல்லிக்கனி போல இலகுவாக அறிந்து கொண்டோம். ஆனாலும் தமுமுகதான் உண்மையான இஸ்லாமிய இயக்கம் என்பதை பல ஆண்டுகள் நம்பிவந்த நான், என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும், எங்கள் பகுதி மக்களுக்கும் மற்றும் என் நண்பர்கள் வட்டாரத்திலும் தமுமுகவுக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என சொல்லிவந்தேன். எதுவரை தெரியுமா?

ஜவாஹிருல்லா சாயப் என்றைக்கு விடுதலைப் புலிகளின் தமிழக தலைவன் சீமானை ராமநாதபுரத்துக்குள் அழைத்து வந்தாரோ அதுவரை! விடுதலைப்புலிகள் நம் சமுதாயத்திற்கு செய்த அநியாய அக்கிரமங்களை ஜவாஹிருல்லா சாயப் வேண்டுமானால், கேவலம் ஓட்டுக்காக மறந்திருக்கலாம். ஆனால் உண்மையான இஸ்லாமிய உணர்வுள்ள நாங்கள் மறந்துவிடவில்லை. என் பாட்டனார் கொழும்பில் உள்ள வவுனியாவில் தான் துணி கடை வைத்து இருந்தார். 24 மணி நேரத்தில் முஸ்லிம்கள் எல்லாம் காலி செய்து ஓடுங்கள் என கொடூர புலிகள் உத்தரவிட்ட போது அங்கிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுடன் சேர்ந்து என் பாட்டனாரும் எல்லாவற்றையும் விட்டு விட்டு வீசின கையும் வெறுங்கையுமாக வெளியேறினார். பிறகு அந்தப்பாவிகள் கண்ட இடங்களில் கண்ட முஸ்லிம்களை குருவி சுடுவது போல சுட்டு வீழ்த்தினார்கள். காத்தான்குடி பள்ளிவாசலிலே அவர்கள் ஆடிய வெறியாட்டம் இன்னமும் யார் மனதையும் விட்டு அகலவில்லை. ஆனால் அதையெல்லாம் நியாயப்படுத்தும் தமிழக புலி சீமானுடன் கைகோர்த்துக் கொண்டு கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் எப்படி ஜவாஹிருல்லா சாயப்பால் எங்கள் மக்களிடம் வாக்கு கேட்க முடிந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை? அரசியல்வாதிகள் ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்றுகேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உங்கள் நடவடிக்கை மூலமாக இதை நான் நேரில் கண்டு விட்டேன்.

ராமநாதபுரத்தில் பிஜெ சாயப் மீட்டிங் நடத்தினார். அந்த மீட்டிங்கைப் பார்த்த பிறகு, எனக்கு சில விசயங்கள் குழப்பமாக இருந்தது. சுனாமி காசை கொள்ளையடித்ததாக தமுமுக மீது குற்றச்சாட்டு வைக்கிறார். அதுபோல வக்ப் இடங்களில் தமுமுக செய்த மோசடி குறித்தும் பட்டியல் போட்டார். ஆனால் இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதுகுறித்து நீங்கள் பதில் அளிக்கும் போது அதை நாங்கள் மறுமையில் சந்திப்போம் என சொல்லியிருந்தார். இங்கே உங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை உடைத்து ஆதாரப்பூர்வமாக அள்ளிப்போட்டு நிருபித்து பொதுமேடையில் பிஜெ சாயப்பின் முகமூடியைக் கிழிப்பீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன்.

ஆனால் அது சம்பந்தமாக பதில் அளிக்காமல் எதையெதையோ காரணம் இல்லாமல் உளறியதைத் தான் காண்முடிந்தது. குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும் என்பது போல இருக்கிறது தமுமுகவினரின் நடவடிக்கை.

அடுத்து பிஜெ சாயப் மனநோயாளி எனவும் உங்களுடன் அவருக்கு இருக்கும் தனிப்பட்ட பகைக்காக மட்டும் தான் திமுகவை ஆதரிக்கிறார் என்றும் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அப்படியானால் ஜவாஹிருல்லா சாயப் திமுகவை பகைத்து அதிமுகவை ஆதரிக்க என்ன காரணம் சமுதாய நலனா? இல்லையே! திமுக இரண்டு தொகுதி தராதது தானே! கருணாநிதி இரண்டு தொகுதி தந்து இருந்தால், கருணாநிதி செய்த துரோகத்தை எல்லாம் மறந்து விட்டு இன்றைக்கும் அவரோடு இருந்திருப்பீர்கள் என்பதை தாங்கள் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் முன்பு அளித்த பேட்டிகளில் இருந்து அறியமுடிகிறது. சமுதாய நலன் கருதியா தமுமுக திமுகவை விட்டு வெளியேறியது? இன்றைக்கு அதிமுகவிடன் சேர்ந்திருக்கும் தமுமுக, சமுதாய நலன் சார்ந்த எந்த கோரிக்கையை முன்வைத்து கூட்டணி அமைத்தது? இட ஒதுக்கீடு பற்றி அதிமுக எதுவும் சொல்லாத போதும் வாய்மூடி மவுனியாக இருந்தது தமுமுக. நமக்கு கிடைத்த இடஒதுக்கீடு (சீட் ஒதுக்கீடு) போதும் என்று இருந்து விட்டது போலும். இவர்களெல்லாம் சமுதாய நலனுக்காக போராடப்போகிறார்களாம்.

அன்றைக்கு அதிமுகவை எதிர்த்துப் பேசிய ஜவாஹிருல்லா சாயப்பிற்கும், இன்றைக்கு திமுகவை எதிர்த்து பேசுகிற ஜவாஹிருல்லா சாயபுக்கும் நிறைய வித்தியாசங்கள். இதில் முழுக்க முழுக்க சுயநலன்கள் மட்டுமே நிறைந்து காணப்படுகிறது. முக்கியமாக அவர்களுக்கு கிடைத்த தொகுதிகளின் அடிப்படையில் மட்டும் தான் அவர்களின் நடவடிக்கை இருக்கிறது.

ஆனால் அன்றைக்கு திமுகவை எதிர்த்து பேசிய பிஜெ சாயப்புக்கும், இன்றைக்கு அதிமுகவை எதிர்த்து பேசும் பிஜெ சாயப்புக்கும் உள்ள ஒற்றுமை சமுதாய இடஒதுக்கீடு கருதி மட்டுமே இருக்கிறது.

மூன்று தொகுதிகளைப் பெற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக மட்டுமே அதிமுகவை ஆதரிக்கும் ஜவாஹிருல்லா சாயப் அவர்கள் சமுதாய நலனுக்காக திமுகவை தேர்தலுக்கு மட்டும் ஆதரிக்கும் பிஜே சாயப்பை மனநோயாளி என்று சொல்கிறார். ஆனால் தன் சொந்த ஊரான தூத்துக்குடியில் போட்டியிடாமல்,தான் வேலை செய்த வேலூர் தொகுதியில் போட்டியிடாமல், தான் வாழ்ந்து வருகின்ற சென்னையில் கூட போட்டியிடாமல் ஜவாஹிருல்லா சாயப் அவர்கள் ராமநாதபுரம் தொகுதியைத் தேர்ந்ததெடுக்க என்ன காரணம்.?

போன நாடாளுமன்றத் தேர்தலில் தமுமுக தனித்துப் போட்டியிட்ட போது அதிகம் வாக்கு வாங்கியது ராமநாதபுரத்தில் மட்டும் தான். அதனால் தான் ராமநாதபுரத்தில் முன்னர் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்ற சலிமுல்லாகானுக்கு கூட வாய்ப்பு கொடுக்காமல் ஜவாஹிருல்லா சாயப் போட்டியிட்டார். ஆக ஜவாஹிருல்லா சாயப்பின் நோக்கமே ஏதாவது ஒரு பதவியைப் பிடித்து விட வேண்டும் என்பது தான். அப்படியானால் ஜவாஹிருல்லா சாயப்பை நான் பதவி வெறியன் என்று சொல்லலாமா.

அடுத்து பிஜெபிக்கு தான் பிஜெ ஓட்டுக்கேட்டார் என்று ஜவாஹிருல்லா சாயப் எழுதியிருக்கிறார். பிஜெ சாயப் பிஜேபிக்கு தான் ஓட்டுக்கேட்டார் என்றால், இவர் அசன் அலியை பிஜேபிகாரர் என்று சொல்ல வருகிறார், என்று தான் அர்த்தம். ஆனால் அசன் அலி இஸ்லாமியர்களுக்கு எதிரான புலிகளுக்கு ஆதரவாக இன்றுவரை இல்லை. சாய்பாபா இறந்து போனதற்கு இரங்கல் கவிதை வாசிக்கவில்லை. இராமேஸ்வரம் புனிதத் தளத்திற்கு பாலம் அமைத்து தருகிறேன் என்று சொல்லவில்லை. இவ்வளவு துரோகத்தையும் நீங்கள் செய்து கொண்டு அவரை எப்படி பிஜேபிகாரர் என்று சொல்ல முடியும். ஒருவேளை ஜவாஹிருல்லா சாயப்புக்காக வாக்கு கேட்டிருந்தால் பிஜெ சாயப் பிஜேபிகாரனுக்கு வாக்கு கேட்டார் என்று சொல்லலாம் . எனவே கண்ணாடி வீட்டிலிருந்து கல்வீசுவதை ஜவாஹிருல்லா சாயப் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மக்கள் பேரியக்கமாக வளர்ந்து விட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதற்காக மன நோயாளியாக மாறி உளருவதை நிறுத்திக்கொள்வதே ஜவாஹிருல்லா சாயப்பிற்கு நல்லது. குறைந்தது என்னைப்போல் இன்னும் உங்களை நம்பி ஒட்டிக்கொண்டு இருக்கும் அடிமட்டத் தொண்டனையாவது இழக்காமல் இருக்கும் வழியைக் காணுங்கள். முஸ்லிம்களின் வெறுப்பை மேலும் சம்பாதிக்காதீர்கள்

-கொழும்பார் என். சேக் அப்துல்லா

ராமநாதபுரம்

நன்றி: உணர்வு வார இதழ்

0 Response to "யார் மன நோயாளி ?"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை